ஏகாந்த மலை ...
இந்த உலகத்தின் சலசலப்புகளை தாண்டி பயணிக்க முடிவெடுத்தான் சரவணன், இயற்கையின் மடியல் தவழ்ந்து விளையாட துடித்தது அவன் மனது. கிடைத்ததை உன்று, வானமே கூரை என்ற மனப்பாங்குடன் பயணம் செய்ய முர்ப்பட்டன். அவன் செய்த முதல் நல்ல காரியம், அவனது அலைபேசியை ஒரு பெரிய பாறையின் இடுக்கில் வைத்து நொறுக்கியது, தன்னை இது நாள் வரை கொடுமைப்படுத்திய அலைபேசியை கொன்ற களிப்பு அவன் கண்களில் தெரிந்தது, உலகில் மனித இனமே கண்டிராத ஒரு வனாந்திரத்தை உலக வரை படத்தில் தேடி கண்டுபிடித்தான், அதை நோக்கி தன பயணத்தை தொடர்ந்தான் சரவணன், நகரத்தில் வாழும் அனைத்து மனிதர்களையும் பார்த்து ஒரு ஏளன சிரிப்போடு தன பின் சுமையை தொழில் ஏற்றிக்கொண்டு விடை பெற்றான் அவன் ...
ஐந்து நாட்கள் ரயிலிலும், பேருந்திலும், மாட்டு வண்டியிலும், போடி நடையாகவும், சுற்றி திரிந்து அலைந்த களைப்பில், ஏகாந்த மலையடிவாரத்தை வந்தடைந்தான் சரவணன், இயற்கைத்தாய் அவனை தன இரு கரங்கள் கொண்டு அவனை வாரி அணைப்பது போல் ஒரு பிரமை தோன்றியது. ஏகாந்த மலை அதன் பெயருக்கு ஏற்ப அழகும் அமைதியும் கொண்ட ஒரு மலை, கடல் மட்டத்திலிருந்து சுமார் 10000 அடி உயரத்தில் உள்ள மலை அது, மனித இனம் இன்னும் கண்டறியாத பல அறிய மூலிகை மரங்களும், உலகம் இதுவரை கண்டறியாத பல அறிய வன விலங்குகளும் வாழும் ஒரு இயற்க்கை பொக்கிஷம் அந்த மலை. அந்த மலையை பற்றி எந்த ஒரு தகவலும் வலை தளங்களில் தென்படவில்லை, அதனாலேயே அவன் ஏகாந்த மலைக்கு வர முடிவெடுத்தான். இனி அவனும் அந்த மலையில் உள்ள இனம் புரியாத ஒரு மௌனமும் தான் நமது கதாபாத்திரங்கள்.
கண்ணில் படும் இடங்கள் எல்லாம் பச்சை நிற போர்வை போத்தியது போல் பசுமை அப்பிக்கிடக்கிறது அந்த மலையில், உயரே செல்ல செல்ல ஒரு மென் குளிர் காற்று நம்மை இதமாக கவ்விக்கொள்ளும், மேலே கருமை நிற முகில்கள் தங்களின் பன்நீர்த்துளிகளை எந்நேரமும் தூவிக்கொண்டே நம்முடன் அலைகிறது, கண்களுக்கு மட்டும் அகப்படாமல் பெயர் தெரியாத பல பறவைகள் தங்களின் குரல் வளத்தில் கட்சேரி செய்த வண்ணம் உள்ளன. வழியெங்கும் காய்ந்த சரடுகளும், உதிர்ந்த இலைகளும், நம் கால்களுக்கு மெத்தை போட்டுத்தந்தன, சற்றே அந்த சருகுகளின் அருகில் சென்று பார்த்தல், அதில் தான் எத்தனை எத்தனை பூச்சிகள் வாழுகின்றன ? செந்நிற வண்ணத்தில் கரு நிற புள்ளிகளுடன் ஒன்று, பச்சை நிற தேகத்தில், மஞ்சள் நிற கோடுகளுடன் ஒன்று, ஆரஞ்சு நிற மேனியில் சிகப்பு நிற தூவல்கள் போட்டு ஒன்று, கரு நிற முதுகில் வெள்ளை நிற சாயம் அடித்த ஒன்று, இவையெல்லாம் நாம் வசிக்கும் நரகத்தில் (நகரத்தில்) பார்த்ததே இல்லையே என்ற வியப்பு சரவணின் கண்களில் தெரிந்தது.
இந்த வனத்தின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் போதாது, அது அனுபவிக்க மட்டுமே முடிந்த ஒரு அபரிமிதமான அழகு, அது போன்ற அடர்ந்த காட்டில் எவரும் மனம் மயங்கித்தான் போவார்கள். ஒரு நீள ஒத்தையடிப்பாதை இரு பக்கங்களிலும் வாசனை ததும்பும் மலர் சொரிந்த மரங்களும், காதுகளுக்கு ரீங்காரமாய் அதனருகே கேட்கும் எங்கிருந்தோ வழிந்தோடும் ஓடையின் சலசலப்பும், அந்த ஓடை எங்கு உள்ளது என்று நம்மை தேடத்தூண்டும் ஆவலும் அந்த பயணத்தை சுகமாக்கிக்கொண்டே வருகிறது. இறவன் ஒரு சிறந்த ஓவியன் என்பதில் ஐயமே இல்லை தான், அவரது கைவண்ணத்தில் தான் எத்தனை அழகு, எந்த ஒரு ஓவியனும் அவனது கற்பனையில் கூட கூட்ட முடியாத வண்ணங்கள், அந்த வண்ணங்களுக்கு என்ன பெயர் என்றே நமக்கு தெரியாது. ஒரு மரத்தில் பூத்திருக்கும் ஒரு பூவின் வண்ணம் எப்படி இருந்தது என்றால், பூமி தொடாத பிள்ளையின் பாதத்தையும், சிவந்த தேகம் உள்ள ஒரு அழகி சிரிக்கும் பொது வெட்க்கி பொங்கும் அவள் நாசியின் நுனியில் தோன்றும் வண்ணத்தையும் சேர்த்து பிசைந்து, அதை சுற்றி மஞ்சளும், குங்குமமும் கலந்து, மாலை வேளையில் அஸ்தமனமாகும் சூரியனின் கதிர்களை கைக்குள் அடக்கும் பொது தோன்றும் ஒரு வண்ணத்தை இணைத்து ஒன்றுடன் ஒன்றை கலந்தது போல் இருந்தது
சரவணனின் மனது ஒரு பிறந்த கோழிக்குஞ்சின் இரகைப்போல லேசாகி இருந்தது, இந்த வாழ்கை அவன் மனதிற்கு ஏற்படுத்திய ரணங்களில் குளிர்ந்த அமிலத்தை மயிலிறகு கொண்டு பூசுவது போல் தோன்றியது. தனிமையும் ஒரு சுகம் தான், நம்மை நாமே புரிந்து கொள்ளும் தருணங்கள் அவை, வெளி உலகிற்கு நாம் நம் மேல் போட்டுக்கொண்டுள்ள பொய் முகத்தை நாமே கிழித்தெறியும் நேரம் தனிமையில் தான், வெட்கமின்றி பகிரங்கமாக நமக்கே கசக்கும் பல உண்மைகள் நம் முன் தாண்டவமாடும் தருணங்கள் அவை. சரவணின் மனதும் அவனோடு பயணிக்கும் அந்த காட்டின் மௌனமும் பேசிக்கொள்ள துவங்கின. பிறந்து, படித்து, உழைத்து வளர்ந்தது எல்லாம் "சென்னை" என்ற சலசலப்பிற்கு பஞ்சம் இல்லாத ஒரு நகரத்தில். எவ்வளவு தான் சுட்டெரித்தாலும், "இவ்வளவுதானா ?" என்பது போல் சூரியனையே கேலி செய்யும் வெள்லேந்தி மனிதர்கள் வாழுமிடம். ஆண்டி முதல் அரசன் வரை எவரையும் வாழ வைக்கும் ஈரமான பூமி. நாகரீகம் என்ற பெயரில், தன்னைத்தானே சீரழித்துக்கொள்லாத வைராக்கிய இடம். என் போல் பிள்ளை பூச்சிகளை பந்தாடிப்பார்ப்பதில் அலாதி பிரியம் கொண்ட ஒரு நகரம்.
வாழ்கை எனும் சக்கரம் சுழல துவங்கி வெகு நாட்கள் ஆகாத ஒரு திருநாளில், துயரத்தின் முதல் தேன் துளி என் மேல் பட்டு சிதறியது, குடும்பத்தின் ஆணிச்சக்கரம் முருங்கிய நாள் அது, அப்படியே அந்த பாரத்தை என் இளம் தோள்களில் வைத்துவிட்டு உன்னுடன் வந்து கலந்தார் என் தந்தை. போராட பயந்தவன் நானில்லை தான் என்றாலும், போராட்டம் நீடித்ததால் மனம் தளர்ந்தேன், துவண்டு போன காலங்களில் தோள் சாய இடமில்லாமல் தலையணைக்குள் சிந்திய கண்ணீர்த்துளிகளை பிழிந்தால் பொங்கிவிடும் வங்கக்கடல். பாழாய்ப்போன வயிற்றையும் அதனுடன் பசி என்ற கொடிய அரக்கனையும் இறைவன் படைத்ததற்காக அவர் மேல் கோபம் கொண்டு கோவிலுக்கு செல்ல மறுத்தவன் நான். பசி என்ற அரக்கன் என்னை சுற்றி இருந்த அனைவரையும் அதன் பசி தீர உண்டு முடித்து, என்னையும் அது விழுங்கும் முன், இதோ உன்னுடன் நான். வாழ்க்கை என்னை துரத்தியதால் நான் உன்னைத்தேடி இங்கு வரவில்லை, என்னை துரத்திய ஒன்றை துரத்திப்பிடிக்கவே நான் இங்கு வந்துள்ளேன்.
அலைந்து திரிந்த களைப்பில், நான் படுத்து உறங்க முடிவெடுத்த இடம் ஒரு கொய்யா பழ மரத்தடியில், நகரத்தில் வாழ்ந்த காலங்களில், உப்பும், மிளகாய்ப்பொடியும் இலாது ஒரு கொயாக்கனியை நான் உண்ட கவனம் எனக்கில்லை. கவனமாக தேடிப்பிடித்து நான் பறித்து ஒரு அணில் கடித்த பழத்தை, அதை கடித்தது அணிலோ, குரங்கோ என்று சரியாக தெரியாது, எனினும், அந்த பழம் வழக்கத்தை விடவும் சுவை மிகுந்ததாகத்தான் இருந்தது, வயிறு முட்ட பழங்கள் உண்ட பரவசத்தில் கண்ணசந்து போனான் சரவணன். வாழ்கையின் கோரப்பிடியில் இருந்து தப்பித்த களிப்பில் மீண்டும் அந்த காட்டின் மௌனத்தை ஆசை தீர அனுபவித்தான் சரவணன், தன்னை வாட்டி எடுத்த வாழ்கையை வென்றுவிட்ட பெருமிதம் அவன் முகத்தில். அந்த வனத்தில் ஈரமில்லாத ஒரு இடத்தை தேடுவது முட்டாள் தனம் என்று தோன்றியது அவனுக்கு. இயற்கை அன்னை அவள் மார்பகத்திலிருந்து வற்றாமல் சுரக்கும் வெண்ணிற அருவியை கண்டான் சரவணன், ஒரு கணம் அந்த பிரம்மிப்பில் தன்னை மறந்தான். நேற்று முதல் அதன் ஒலியை மட்டுமே கேட்ட அவன் காதுகள், இன்று அந்த பிரம்மாண்டத்தை அவன் கண்களும் சுவைத்தது
உலகில் எவரும் இதுவரை அந்த அருவியை கண்டிருக்க இயலாது, ஏன் தெரியுமா ? அங்கு தான் தூக்கி எறியப்பட்ட சந்திரிகா சோப்பு பெட்டிகளோ, மூக்கு வெட்டப்பட்ட ஷாம்பூ கவர்களோ இல்லையே. தானும் இந்த உலகில் ஒன்றை கண்டுபிடித்த சந்தோஷத்தில் தத்தளித்தது அவன் மனது, தன் வாழ்வின் பாவங்களை துடைக்க அதை விட ஒரு சுத்தமான நீர் கங்கையிலும் கிடையாது என்றுணர்ந்து, மூக்கடைத்து அந்த வழுக்கும் பாறைகளில் அமர்ந்து, குளிருக்கு புது விளக்கமளிக்கும் அந்த அருவியில் கண்மூடி கிடந்தான் சரவணன். அவன் வாழ்கையின் முன்னோட்டம் அவன் மனத்திரையில் ஓட துவங்கியது. அவன் பிறந்தது முதல், அவன் வாழ்கை கடந்து வந்த பாதைகளும், அதில் அவனை தீண்டிய கூர் முட்களும் ஒரு திரைப்படமாய் ஓட துவங்கின, அப்பொழுது வீசும் தென்றலாய் அவன் மனத்திரையில் தோன்றினாள் "ரேவதி" அவன் வாழ்வின் ஒரே விடிவெள்ளி, அவனை அவனுக்காக நேசித்த ஒரு ஜீவன், அவளுடன் அவன் வாழ்ந்த வசந்த காலங்களை நினைக்கையில், தண்ணீரின் குளிர் மேலும் அதிகரித்ததை அவனின் நடுங்கும் புஜங்கள் ஊர்ஜீனம் செய்தன
அந்த அருவியின் சாரல்கள் பாறைகளில் தெறித்து வெண் புகையை காற்றில் கலந்தது, அந்த நீர்த்துளிகளின் சிதரளைப்போல ரேவதியின் நினைவும் அவனுள்ளே சிதறிப்போனது அந்த ஒரு சொல் அவன் நினைவில் நுழைந்த பொழுது "சோத்துக்கே வக்கில்லாத உன்ன கட்டிக்கிட்டு என்ன சொகத்த காண போறேன்", அவன் தலையில் விழுந்து கொண்டிருந்த அருவியின் கணத்தை விட அந்த சொல்லின் கணம் அவன் இதயத்தை பிளந்தது, இதுநாள் வரை அவனை துரத்திய அந்த தனிமை எனும் அரக்கனை தேடி, வழுக்கும் பாறைகளில் மெல்ல நடந்து, அருவியின் ஓர் உச்சியில் தன் இரு கைகளையும் விரித்து, தனக்கு சந்தோஷத்தை அளித்த அந்த ஏகாந்த மலைக்கும், அங்கே வாழும் பறவை இனங்களுக்கும், சிரம் தாழ்த்தி வணங்கிவிட்டு, அருவியின் காற்றோடு ஒன்றாய் கலந்தான் சரவணன், அவனை துரத்திய தனிமையோடு ஒன்றாய் கலந்தது அவன் உயிர். அந்த நிகழ்வையும் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தது ஏகாந்த மலை.
Nice story but didn't like the ending. But, nice flow...
ReplyDelete